குளித்தலை அருகே வீரணம்பட்டி, கோயில் திருவிழாவில் சாமி கும்பிட சென்ற பட்டியல் இனத்தவர்களை மாற்று சாதியினா் அனுமதிக்காததால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேலப்பகுதி கிராமம் வீரணம்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ பாம்பளம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அப்பகுதியில் உள்ள சுற்று வட்டார கிராம மக்களுக்கு சொந்தமான பொது கோயில் என்று கூறப்படுகிறது. இக்கோயிலில் நேற்று முதல் திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது.
இத்திருவிழாவில் சாமி கும்பிடுவதற்காக வீரணம்பட்டியைச் சேர்ந்த பட்டியல் இனத்தவர் சக்திவேல் என்பவர் கோயிலின் உள்ளே சென்றுள்ளார். அப்பொழுது மாற்று இனத்தைச் சேர்ந்தவர் ’கோயில் உள்ளே நீ வரக்கூடாது, உனக்கு திருநீா் வழங்கப்பட மாட்டாது. நீ வெளியே செல்’ என வலியுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீரணம் பட்டியைச் சேர்ந்த பட்டியல் இன மக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னா் தகவல் அறிந்த கரூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் மோகன், குளித்தலை காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, தற்போது கோயில் உள்ளே யாரும் செல்லக்கூடாது என்றும், நாளை கோயில் முன்பாக அனைவரும் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு செல்லுமாறும் போலீசார் அவர்களுக்கு வலியுறுத்தினர்.
இரு தரப்பினரும் இதனை ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் சாலை மறியல் கைவிடப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனையடுத்து சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
– ரூபி.காமராஜ்







