மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது தந்தைக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் பயணித்த தூத்துக்குடி விமானத்தில், ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியா தனது பெற்றோருடன் பயணித்துள்ளார். அப்போது, பாஜக ஆட்சி ஒழிக என கோஷம் எழுப்பியதால் விமானத்திலும், விமான நிலையத்திலும் இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்ட மாணவி சோபியா பின்னர் ஜாமினில் வெளிவந்தார். இந்நிலையில் பொய் வழக்கு மூலம் சோபியாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சோபியாவின் தந்தை ஏ.ஏ.சாமி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சோபியா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து குற்றவியல் நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டுமெனவும் அவர் கைது செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினரான நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சோபியாவிற்காக அவரது தந்தை ஏ.ஏ.சாமிக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார். மேலும் ஏழு ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளில் கைது நடவடிக்கையில் ஈடுபடும்போது, காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படக்கூடாது என உரிய அறிவுறுத்தல்களை வழங்கும்படி தமிழக டிஜிபி-க்கும் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் அறிவுறுத்தினார்.







