மனித கேடயமாக பயன்படுத்தப்படும் இந்திய மாணவர்கள்

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரத்தில், இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் மனித கேடயமாக பயன்படுத்துவதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக, ரஷ்ய அதிபர் புதினுடன், பிரதமர்…

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரத்தில், இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் மனித கேடயமாக பயன்படுத்துவதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றம்சாட்டியுள்ளார்.

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக, ரஷ்ய அதிபர் புதினுடன், பிரதமர் மோடி தொலைபேசி வழியாக பேசினார்.

பின்னர், உக்ரைன்- ரஷ்ய போர் தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் பேசியது குறித்து ரஷ்ய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், போர் நடைபெறும் பகுதிகளில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாக ரஷ்ய ராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முயற்சிகளை ரஷ்ய ராணுவம் மேற்கொண்டுள்ளதாகவும், இந்திய மாணவர்களை கார்கிவ் பகுதியில் இருந்து குறுகிய பாதை வழியாக ரஷ்ய எல்லைக்கு அழைத்துச் செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடியிடம் புதின் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அண்மையில் கிடைத்த தகவலின் படி உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை பிணையாகவும், மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும், இந்தியர்களை ரஷ்ய எல்லைக்கு வர அனுமதிக்கப்படாததால், அனைத்து மாணவர்களின் நிலை உக்ரைனின் கையிலே உள்ளது என்றும் புதின் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இருநாட்டு தலைவர்களும் மாணவர்கள் பாதுகாப்பு விஷயத்தில் பரஸ்பர முழு ஒத்துழைப்பு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.