கனியாமூர் பள்ளி மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு வழக்கில் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார்…

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு
வழக்கில் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா ஆஜராகி முதல் வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்தார்.

சிபிசிஐடி விசாரணை மற்றும் மறு பிரேத பரிசோதனை செய்ய அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

போராட்டம் நடத்த அனுமதித்தது யார்? இறப்புக்கு காரனம் என்ன? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “வெளிநாட்டில் இருந்த மாணவியின் தந்தை 14ம் தேதி தான் வந்தார். வன்முறையில் பெற்றோருக்கு தொடர்பு இல்லை. வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை காவல் துறையினர் தான் கண்டுபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, “சிறப்பு படை அமைத்து அவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.  அவர்கள் சட்டத்தை கையில் எடுக்க முடியாது. வன்முறை சம்பவத்தை பொறுத்தவரை விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும். 4500 மாணவர்களின் நிலை என்ன? சான்றிதழ்கள் எரிக்கப்பட்டுள்ளன. திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை என்று தெரிகிறது” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

“யாரையும் பாதுகாக்கும் நோக்கம் இல்லை. முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வேறு என்ன கேட்கிறார்கள் என தெரியவில்லை” என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். தகுதியில்லா மருத்துவர்கள் கொண்டு நடத்தப்பட்டது  என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதம் முன்வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “தகுதியில்லாத மருத்துவர்கால் என எப்படி சொல்லலாம். நீங்கள் நிபுணரா?” என வினவினார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு விவரம்:

வன்முறை சம்பவம் குறித்து சிறப்புப்படை அமைத்து விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் கல்வி நிறுவனங்களில் இறப்புகள் நிகழும் போதெல்லாம், CBCID மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும். 3 மருத்துவர்கள் கொண்ட குழுவால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.

இந்த வழக்கில் நீதிமன்றம் நியமிக்கும் மருத்துவர்கள் குழு மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு எடுக்க வேண்டும். மறு பிரேத பரிசோதனையின் போது மாணவியின் தந்தையும் அவரது வழக்கறிஞரும் உடன் இருக்கலாம். பிரேத பரிசோதனைக்கு பின் மனுதாரர் வேறு எந்த பிரச்சனையும் செய்யாமல் மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இறுதி சடங்கு அமைதியான முறையில் நடைபெற வேண்டும்.

தற்போது கைது செய்ததோடு வேலை முடிந்து விட்டதாக காவல்துறை நிறுத்தி கொள்ள கூடாது. கலவரத்துக்கு யார் காரணம் என்பதை புலன் விசாரணை செய்ய வேண்டும். மாணவியின் பெற்றோர் மீது இரக்கம் கொள்கிறேன். ஆனால் மற்றவர்களின் உயிரை இக்காட்டான நிலைக்கு தள்ளக்கூடாது. தொடர்ந்து வழக்கு விசாரணை ஜூலை 29 தள்ளிவைக்கிறேன் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மறு பிரேத பரிசோதனை செயய் உயர்நீதிமன்றம் அமைத்த மருத்துவர் குழு :

  • டாக்டர்.கீதாஞ்சலி. விழுப்புரம் அரசு மருத்துவமனை.
  • டாக்டர்.ஜீலியான ஜெயந்தி, திருச்சி அரசு மருத்துவமனை.
  • டாக்டர்.கோகுலநாதன், சேலம் அரசு மருத்துவமனை
  • சாந்தகுமாரி, தடயவியல் துறை ஓய்வு பெற்ற நிபுணர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.