கறந்த பால் மடிபுகாது, மீன் கருவாடு ஆகாது என்பது போல ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை பல்லவன் இல்லம் அருகில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் ஓ பன்னீர்செல்வம் அணிக்கு தாவியதால் எந்த விதமான பின்னடைவும் ஏற்படவில்லை. சசிகலா, டிடிவி ஆகிய இருவரிடமும் கொட்டிக் கிடக்கும் பணம் பாதாளம் வரை பாயும் எனவும் பேசினார்.
ஓ,பன்னீர்செல்வம் உத்தமன் போல நடிப்பதாகவும். நடிக்கச் சென்று இருந்தால் ரஜினி, சிவாஜி எல்லாரையும் தோற்கடித்து விட்டு ஆஸ்காரையே மிஞ்சி இருப்பார். சொல் புத்தியும் சுய புத்தியும் இல்லாத ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கிவிட்டு ஆணையத்தில் ஆஜராகும் போது எந்தவிதமான சந்தேகமும் இல்லை என வாக்குமூலம் அளிப்பதாக கூறிய ஜெயக்குமார், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
கறந்த பால் மடிபுகாது, மீன் கருவாடு ஆகாது என்பது போல ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்க முடியாது எனவும், இணைக்க அறைகூவல் விடுக்க ஓபிஎஸ் என ஐநா சபை தலைவரா எனவும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையை திமுக அரசு வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்ட பிறகு தங்களுடைய கருத்தை தெரிவிப்பதாகவும் ஜெயக்குமார் கூறினார்.







