இந்தியையும், இந்துத்துவா சக்திகளை நிலை நாட்ட பிரதமர் மோடி செயல்படுகிறார் – வைகோ

தமிழ்நாட்டில் இந்தியையும், இந்துத்துவா சக்திகளை நிலை நாட்ட பிரதமர் மோடி செயல்படுகிறார் என வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.   திருநெல்வேலியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம்…

தமிழ்நாட்டில் இந்தியையும், இந்துத்துவா சக்திகளை நிலை நாட்ட பிரதமர் மோடி செயல்படுகிறார் என வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

 

திருநெல்வேலியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிட மாடல் ஆட்சியை மிக வெற்றிகரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். மூன்று லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மூன்று நாட்களுக்கு முன்னால் கையெழுத்திட்டுள்ளார்.

 

சொல்லாததையும் செய்து வருகிறேன் என அவர் சொல்லி வருவதைப் போல சொல்லாததையும் செய்து காட்டி தமிழ்நாடு முதலமைச்சர் சாதித்து வருகிறார். தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பின்னர் சிறந்த ஆட்சி நடைபெற முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது. ஆதிக்க சக்திகள் சங்பரிவார் சக்திகள் இந்தியயும், சமஸ்கிருதத்தையும் திணித்து தமிழ்நாட்டை கைப்பற்றலாம் என நினைக்கும் கனவு ஒருபோதும் நிறைவேறாது.

இந்தூரில் 75 வது ஆண்டுகால சுதந்திர தின விழாவை முன்னிட்டு சங்பரிவார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவின் உருவத்தை வைத்து கோட்சே வாழ்க என்று கோஷம் எழுப்பப்பட்டது. இதனை விட கொடுமை வேறு எங்கும் இருக்காது. நாட்டின் பல தலைவர்கள் தங்களுக்கு வழிகாட்டும் தலைவராக மகாத்மா காந்தியை ஏற்றுக்கொண்டனர். மனித குலத்திற்கு வழிகாட்டும் தலைவராக இருக்கும் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொடியவருக்கு விழா எடுக்கும் கூட்டம் சங்பரிவார் அமைப்பு அவர்களது நிணைப்பு இந்தியாவை கைப்பற்ற வேண்டும் என்பது மட்டுமல்ல தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளை ஒட்டுமொத்தமாக கைப்பற்றி இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து திணித்து தான் என்றார்.

 

திராவிட இயக்க சக்திகளின் உணர்வுகளால் தான் இந்துத்துவ சக்திகள் தமிழ்நாட்டில் கால் எடுத்து வைக்க முடியவில்லை. திராவிட மாடல் ஆட்சி என்பது ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட கோட்டை என்பதை மறந்து விட்டார்கள். ஆள் பிடித்துக் கொண்டு வந்து திராவிட இயக்கத்தை விமர்சிப்பதும் தமிழ் நாடு என்ற உணர்வை மழுங்கடிக்கும் முயற்சி
ஈடுபட்டிருக்கிறார்கள். பிரதமர் சாதுரியமானவர் மகா கெட்டிக்காரர், தமிழகத்திற்கு வந்தால் திருவள்ளுவரை பாரதியாரைப் பற்றி பேசுகிறார் வடக்கே சென்றால் ஹிந்தியில் பேசுகிறார். இந்தியயும் இந்து துவா சக்திகளையும் நிலைநாட்ட பிரதமர் செயல்பட்டு வருகிறார் என்ற அவர், தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்ட திராவிட இயக்க கோட்டையை சிதைத்து விடலாம் என்ற மோடி கூட்டத்தின் பகல் கனவு ஒரு காலம் நிறைவேறாது என தெரிவித்தார்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.