கட்சியின் செயல்பாட்டை முடக்கப் பார்க்கிறார் ஓபிஎஸ் – இபிஎஸ் மனு!

அதிமுக கட்சியின் செயல்பாடுகளை ஓபீஎஸ் முடக்கப் பார்ப்பதாக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளை எதிர்த்து எடப்பாடி தாக்கல் செய்த…

அதிமுக கட்சியின் செயல்பாடுகளை ஓபீஎஸ் முடக்கப் பார்ப்பதாக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளை எதிர்த்து எடப்பாடி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதேபோல, பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவும் உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில் தெரிவித்துள்ளதாவது: ஓ.பி.எஸ்.இன் நடத்தையால் அ.தி.மு.க கட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. கடந்த 23ஆம் தேதி பொதுக்குழு நடக்கும் என்ற அறிவிப்புக்குப் பின்னர் அதனைத் தடுக்க பல்வேறு வழிகளை மேற்கொண்டார். குறிப்பாக ஒற்றைத் தலைமை என்ற கருத்து எழுந்தவுடன் இந்த பொதுக் குழுவை நடக்கவிடாமல் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டார். பொதுக் குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதினார். இது அத்தனையும் கட்சி தொடண்டர்கள் தங்களது உணர்வுகளையும், கருத்துகளையும் வெளிப்படுத்தி விடக்கூடாது என்ற நோக்கில் செயல்பட்டார்.

உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு ஓ.பி.எஸ். உரிய ஒத்துழைப்பை கொடுக்கவில்லை. இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கெடுக்க அழைப்புவிடுத்தும் அவர் கலந்து கொள்ளவில்லை. மேலும், கட்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என்பதைத் தாண்டி ஓ.பி.எஸ். கட்சியின் பொருளாளர். ஆனால், அவர் கட்சி நிதியை விடுவிக்காததால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையும், கட்சி செலவுக்கான தொகையையும் எடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பொருளாளர் என்ற முறையில் தனது கடமையை செய்யாமல் கட்சியின் நலனை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 23ஆம் தேதி பொதுக்குழவில் நடைபெற்ற சம்பவங்களைப் பார்க்கும்போது ஓ.பி.எஸ். அ.தி.மு.க தொண்டர்களிடையே செல்வாக்கையும், நம்பிக்கையையும் இழந்துவிட்டார் என்பது தெளிவானது, எனவே தான் இணைந்து செயல்பட ஓ.பி்எஸ் மறுத்து வருகிறார். மேலும், வரும் 11ம் தேதி கூடும் அ.தி.மு.க பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகள் குறித்து முடிவெடுக்க விரிவான அஜண்டாவை பொதுக் குழு உறுப்பினர்கள் 2,432 பேர் கடிதம் மூலம் தயாரித்துள்ளனர்.

தனக்கான செல்வாக்கு, நம்பிக்கையை கட்சியினரிடையேயும், பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியிலும் இழந்ததால் ஓ.பி.எஸ். பொதுக்குழுவை நடத்த தடை கோருகிறார். இவ்வாறு கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு கட்சி செயல் பாடுகளையும், பொதுக்குழுவையும் முடக்க முற்படுகிறார். இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இந்த மனுவுடன் இணைத்துள்ளதாக ஈ.பி.எஸ். தனது கூடுதல் மனுவில் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.