இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் சாம்பல் நகரில் ஹோட்டல் நடத்தி வரும் தலிப் ஹூசைன் என்பவர், அசைவ உணவுகளை பார்சலில் வழங்கும்போது இந்து கடவுளர்களின் படங்கள் உள்ள பேப்பர்களில் வைத்து மடித்துத் தருவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, அவரது ஹோட்டலுக்குச் சென்ற போலீசார், ஆய்வு செய்ய முயன்றுள்ளனர். அப்போது, தலிப் ஹூசைன் போலீசாரை கத்தியைக் கொண்டு மிரட்டியதாகவும், கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்துள்ள சாம்பல் மாநகர காவல்துறை உயர் அதிகாரி ஜிதேந்தர் குமார், இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.
இரு பிரிவினரிடையே மத மோதல்களை ஏற்படுத்தக் காரணமாக இருந்தது, மத உணர்வுகளை புண்படுத்தியது, கொலை முயற்சி ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் தலிப் ஹூசைன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்து கடவுளர்களின் படங்கள் உள்ள பேப்பர்கள் மீது அசைவ உணவுகளை வைத்து பார்சல் செய்து தருவதை தலிப் ஹூசைன் வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும், இதுகுறித்து பல முறை பலர் அவரிடம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தலிப் ஹூசைன் கைது செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் பலர் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.










