தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு; புதுவையில் நாளை முதல் மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

புதுச்சேரி மின்துறை தனியார்மயத்துக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை துவக்குவதாக அறிவித்துள்ளனர். யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரி…

புதுச்சேரி மின்துறை தனியார்மயத்துக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை துவக்குவதாக அறிவித்துள்ளனர்.

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார்மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இதை கண்டித்து புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழுவை உருவாக்கி போராட்டம் நடத்த தொடங்கினர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார்மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதனிடையே தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தை கடந்த பிப்ரவரியில் தொடங்கினர். தொழிற்சங்கத்தினரிடம் கலந்து ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்கமாட்டோம் என்ற முதல்வர் ரங்கசாமியின் வாக்குறுதி ஏற்று வேலைநிறுத்தத்தை திரும்ப பெற்றனர்.


இந்நிலையில் மின்துறை தனியார் மயத்துக்கான டெண்டர் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. அதில் புதுச்சேரி அரசு மின்துறைக்கான ஏலத்துக்கு ஆர்வமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். விநியோகத்தில் நூறுசதவீத பங்குகளை
வாங்க ஏலத்தாரர் தேர்வு செய்யப்படுவார்கள். முன்மொழிவுக்கான கோரிக்கைக்கு ஏலத்தாரர்கள் ரூ.5.90 லட்சம் செலுத்தவேண்டும். வங்கி செக்யூரிட்டியாக ரூ.27 கோடி இருக்கவேண்டும். முன்மொழிவுக்கான கோரிக்கை வரும் 30ம் தேதி தொடங்கும். விண்ணப்பிக்க வரும் நவம்பர் 25ம் தேதி இறுதிநாள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மின்துறை பொறியாளர்-தொழிலாளர் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில், மின்துறை தனியார்மயத்துக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது, அதனால் நாளை காலை 9 மணிக்கு தலைமை அலுவலகத்தில் அனைத்து பொறியாளர்களும், தொழிலாளர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் துவக்குகிறோம் என அறிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.