மதுபான கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்

மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை திறப்பதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மதுபான…

மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை திறப்பதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மதுபான கடை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. இதனை கண்டித்து கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அதனால் கோட்டூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் கோட்டூர் கிராமத்தில் அரசு மதுபான கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. அதனை எதிர்த்து, கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்று கோட்டூர் பேருந்து நிலையத்தில் மதுபான கடை திறப்பதற்கு எதிராக சாலைமறியல் போராட்டம் நடத்தினர். முன்னதாக, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பேரணியாக வந்த கிராம மக்கள் கோட்டூர் பேருந்து நிலையத்தில் சாலையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கோட்டூர் அடைப்பாறு அருகே அரசு மதுபான கடை அமைய உள்ள இடத்தில் அரசு பெண்கள் பள்ளி, மாணவியர் விடுதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தீயணைப்பு நிலையம், மற்றும் பொதுமக்கள் குளிக்கும் படித்துறை அமைந்துள்ளதால் இந்த பகுதியில் மதுபானக் கடை திறக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினர்.

இதனால் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி செல்லும் பேருந்து, வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. அரசு மதுபானக் கடை அமைப்பது குறித்து மன்னார்குடி வட்டாசியர் ஜீவானந்தம், திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி.சோமசுந்தரம், கோட்டூர் காவல் ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு, மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.