எப்போது திருந்துவோம்! – காட்டு யானைகள் காக்கப்படுமா?

ஆழியாறு அணைக்கட்டு பகுதிகளில் உள்ள யானைகளின் வழித்தடத்தில் ஒரே நாளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ளது ஆழியாறு அணை. முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் கட்டப்பட்ட…

ஆழியாறு அணைக்கட்டு பகுதிகளில் உள்ள யானைகளின் வழித்தடத்தில் ஒரே நாளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ளது ஆழியாறு அணை. முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் கட்டப்பட்ட இந்த அணையைச் சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளும் காடுகளும் நிரம்பியுள்ளன. இந்த அணையைச் சுற்றியுள்ள பகுதிகள் யானைகளின் வாழிடமாக இருந்து வருகிறது.

தமிழகம் மட்டுமல்லாது கேரள எல்லைப் பகுதிகளில் வசித்து வரும் யானைகளும் ஆழியார் அணைக்கு அருகில் தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். யானைக் கூட்டங்களின் இல்லமாகத் திகழும் ஆழியாறு அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவைகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களில் மனிதர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

’மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்ற வாசகத்தைப் புதுப்பித்து, ’மது நாட்டுக்கும் வீட்டுக்கும் காட்டுக்கும் கேடு’ என்ற புதிய வாசகத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர் மனிதர்கள். ஆழியாறு அணைக்கட்டு யானை வழித்தடங்களில் மது அருந்துவோர் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே வீசிச்செல்கின்றனர். முழுமையாகவும், உடைந்த நிலையிலும் கிடக்கும் மது பாட்டில்கள், யானைகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன.

யானைகளின் உடல் எடை காரணமாக மது பாட்டில்கள் உடைந்து, அவைகளின் பாதத்தை காயப்படுத்தக் கூடும். மேலும், மது பாட்டில்களின் கண்ணாடித் துண்டுகள் யானைகளின் உடலுக்குள் சிக்கிக் கொள்வதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. ஒரே நாளில் ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் உள்ள யானைகளின் வழித்தடத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன.

அண்மையில் கேரளாவில் வெடிவைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் அவ்வப்போது மின்வேலிகளில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழக்கும் அவலமும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் யானைகளின் வழித்தடத்தில் மது பாட்டில்கள் கிடந்தது, மனிதனிடம் மனிதத்தன்மை எங்கே என கேள்வி எழுப்பியுள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகனின் ’யானை டாக்டர்’ புத்தகத்தில் இடம்பெறும் வரிகள் நிஜ உலகில் உருவெடுக்கத் தொடங்கியுள்ளன. மிகவும் சக்திவாய்ந்த ஒரு இனத்திற்கு மனிதர்கள் எமனாக உருவெடுத்துள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை. யானைகள் ஒரு காட்டையே உருவாக்கும் ஆற்றல் வாய்ந்தது. அத்தகைய ஒரு இனத்தை மனிதனின் சுயநலம் மெல்ல மெல்ல கொன்று வருகிறது. யானைகள் மட்டுமல்லாது மற்ற விலங்கினங்களையும் இந்த மதுபாட்டில்கள் பாதிக்கிறது.

ஆழியாறு அணையை சுற்றியுள்ள பகுதிகளில் மது அருந்துவோர் தடுக்கப்பட வேண்டும் என்பதும் மீதம் இருக்கும் மது பாட்டில்களை அகற்ற வேண்டும் என்பதும் சமூகம் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது.

 

– ஜெனி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.