விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்எல்சி-க்கு எதிர்ப்பு – பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் கடலூரில் பரபரப்பு

2-வது சுரங்க விரிவாக்க பணிகாக விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளை என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கிய நிலையில், அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கடலூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

2-வது சுரங்க விரிவாக்க பணிகாக விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளை என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கிய நிலையில், அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கடலூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலக்கரி 2-வது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கத்தாழை, கரிவெட்டி ,வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

அதன்படி 2006 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை கடந்த மார்ச் மாதம் 10-ஆம் தேதி அன்று வளையமாதேவி கிராமத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் என்எல்சி நிறுவனம், இயந்திரங்களைக் கொண்டு நிலங்களை சமன்படுத்தியது. இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப்பகுதி விவசாயிகளும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்கினர்.

குறிப்பாக வளையமாதேவி கிராமத்தில் நிலத்தை சமன் செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த காவல்துறையினரிடம் பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து வளையமாதேவி மெயின்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்த முயன்ற பாமகவினர், பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து நிலம் கையகபப்டுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மீண்டும் இன்று காலை சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவியில் நடவு செய்யப்பட்ட வயலில் சுரங்கத்திற்காக வாய்க்கால் மற்றும் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. இதற்காக 30-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் நடைபெற்றன. இன்னும் 2 மாதத்திற்குள் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யவுள்ள நிலையில், நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு கால்வாய் மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கி உள்ளதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வரும் நிலையில் பாதுகாப்புக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே போலீசாரின் துணையுடன் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் வளையமாதேவி கிராமத்தில் மேற்கொள்ளப்படுவதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வளையமாதேவி சென்று போராட்டம் நடத்த முயன்ற அக்கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டதால் சேத்தியாதோப்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.