ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நான்காவது முறையாக, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்த்து, 4,750 ஏக்கரில் அமைய உள்ளதாக 6 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்து, அதற்கான ஒப்புதலும் வழங்கியது. இதையடுத்து, பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு, கடந்த 183 நாட்களாக ஏகனாபுரம், நெல்வாய் குணகரம்பாக்கம், மேலேரி உள்ளிட்ட 12 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஏகனாபுரத்தில் ஏற்கனவே ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது என்றும், இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று ஏகனாபுரம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ஜெயகாந்தன் கலந்து கொண்டார். கிராம சபைக் கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
இதில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முதலாவதாக, பரந்தூர் விமான நிலையம் அமையக் கூடாது என்றும், எந்த விதத்திலும் இதற்கு இந்த கிராமம் துணை நிற்காது எனவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது கிராம மக்கள் அனைவரும் கைதட்டி, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்றனர்.







