நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 2ம் தேதியில் இருந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதில் ராகுல் காந்தி பேசும்போது, முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே எழுதிய ஒரு புத்தகத்தில் இருந்து சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்த தகவல்களை சுட்டிக்காட்ட விரும்பினார். இதற்கு ஆளுங்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தில் வார்த்தைப் போர் நீடித்து வருகிறது.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணிக்கு பதிலுரை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக பிரதமர் மோடியின் பதிலுரை நேற்று ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே இன்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு பதாகைகளுடன் முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பான சூழல் நிலவியது. அமளிக்கு மத்தியில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை குரல் வாக்கெடுப்பு நடத்தி அவைத் தலைவர் ஓம் பிர்லா நிறைவேற்றியுள்ளார். தொடர்ந்து இன்று பகல் 2 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது தொடர்பாக மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில்,
அவை தொடர்ந்து முடங்கி இருப்பது தனக்கு மிகுந்த கவலையை கொடுக்கிறது அவை சரியாக நடக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் அவையை மொத்தமாக முடக்கி இருக்கிறது. மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் பதிலளிக்க இருந்தபோது, சில காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமரின் இருக்கைக்கு அருகே சென்று ஒரு அசம்பாவித சம்பவத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தனக்குத் தகவல் கிடைத்தது.
இத்தகைய சூழலில் நாட்டின் ஜனநாயக மரபுகள் சிதைக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என கேட்டு கொண்டேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருந்தால் மக்களவைக்கு களங்கம் ஏற்பட்டிருக்கும். நான் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாளை காலை 11 மணி வரை அவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.







