மத்திய அரசின் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சிகள் பேரணியில் ஈடுபட்டன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி தொடங்கியது. ஆரம்ப நாள் முதலே பெகாசஸ், வேளாண் சட்டங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஆனாலும், விவாதம் நடத்தப்படவில்லை.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முடிப்பது குறித்து எதிர்க்கட்சிகளிடம் கலந்தாலோசிக்காமல், அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாக நேற்று முடிக்கப்பட்டது. பெகாசஸ் விவகாரம், புதிய வேளாண் சட்டம் குறித்து விவாதமே நடத்தாமல், புதிதாக 19 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன.
இந்நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜீனா கார்கே அலுவலக அறையில் எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 14 எதிர்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர். . தொடர்ந்து, மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் விஜய்சதுக்கம் வரை பேரணியை மேற்கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதம் நடத்த மத்திய அரசு முன்வரவில்லை. நாடாளுமன்றத்தில் பேச எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஊடகத்திடம் பேச வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றார். இது ஜனநாயக படுகொலை என்றும் அவர் விமர்சித்தார்.







