மைசூர் அலுவலகத்தில் உள்ள கல்வெட்டுக்களை தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை சென்ற தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, இந்தியாவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் அதிகமான கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகளே அந்த படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மைசூரில் உள்ள அலுவலகத்தில் உள்ளது, இதனை தமிழகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.
கல்வெட்டுகள் தமிழ் மொழிக்கானவை என்றால் அதை திராவிட மொழியுடன் அடையாளப்படுத்துவது ஏன் என நீதிபதிகள் எழுப்பிய கேள்வி தொடர்பாகவும் பதிலளித்தார் அமைச்சர்.
இந்தியாவில் இருக்கக்கூடிய அதிக கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகளே எனவே அதிக அளவு தமிழ் கல்வெட்டுகள் இருக்கும்பட்சத்தில் ஏன் அதற்காக பணியாளர்கள் நியமிக்கப்படாமல் வேறு மொழிக்காக நியமித்து உள்ளார்கள் என நீதி அரசர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் என்று குறிப்பிட்ட அமைச்சர், தமிழ் கல்வெட்டுகள் அதிகமாக படி எடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக எழுப்பி உள்ளார்கள் என நினைக்கிறேன் என பதிலளித்தார்.







