பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் – பாஜக தலைவர்கள் விமர்சனம்!

பாட்னாவில் இன்று நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில், 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்த நிலையில், இக்கூட்டம் குறித்து பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல்…

பாட்னாவில் இன்று நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில், 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்த நிலையில், இக்கூட்டம் குறித்து பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன. இந்த தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதில் பாஜக தீவிரம் காட்டும் நிலையில், மக்களவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று காலதாமதமாக நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது.

பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 17 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட 6 மாநில முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, முதலமைச்சர்களான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர்  பகவந்த் மான், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்,  மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்,  ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், பாட்னாவில் இன்று நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா இந்திரா காந்தியின் ஆட்சியில் நிதிஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று அவற்றையெல்லாம் அவர்கள் மறந்து, இந்திராகாந்தியின் பேரனுடன் கைகோர்த்துள்ளனர். ஒருபோதும் அவர்களின் கனவு பலிக்காது. மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சிதான் மத்தியில் அமையும் என்று தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், 2024 தேசியத் தேர்தலுக்கு முன்னதாக பாட்னாவில் பாரதிய ஜனதா அல்லாத கட்சிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளனர். அதனால் ஒரு பயனும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார். மோடியின் சிறந்த முயற்சிகளால் லோக்சபாவில் உள்ள 543 தொகுதிகளில் 300க்கும் அதிகமான இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும், பாஜகவை தோற்கடிப்பதற்கான ஒற்றுமைக்கான முயற்சிகள் ஒருநாளும் எடுபடாது எனவும் கூறினார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தை கொலை செய்த காங்கிரஸ் தலைமையில் அதனை அப்போது எதிர்த்த தலைவர்கள் ஒன்று சேர்வது கேலிக்கூத்தானது,. மோடியை எதிர்த்துப் போராட காங்கிரசால் மட்டும் முடியாது என்ற செய்தியை நாட்டிற்குச் சொல்லி இவர்கள் ஒன்று சேர்வது வேடிக்கையானது. பிரதமர் மோடியை காங்கிரஸால் மட்டும் தோற்கடிக்க முடியாது என்பதாலையே பிற கட்சிகளின் உதவியை இவர்கள் நாடியுள்ளனர். இதை பகிரங்கப்படுத்தியதற்காகவே காங்கிரஸுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

இவர்களை தொடர்ந்து , எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராடினாலும் எந்த மாற்றமும் ஏற்படாது. 2024ல் மக்கள் மீண்டும்  மோடியை பிரதமராக்குவார்கள் என மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியுள்ளார். அதேபோல் பாஜக எம்.பி.ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பாட்னாவில் 2024 தேர்தலுக்கான திருமண ஊர்வலத்தை நிதீஷ் குமார் அலங்கரிக்கிறார். ஆனால் மாப்பிள்ளை யார் ? என்று தெரியவில்லை. அனைவரும் தங்களை பிரதமர் போட்டியாளர் என்று கருதுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், பீகார் ஒருபோதும் ஊழல்வாதிகளை ஆதரிக்காது என்பதை மறந்துவிட்டார்கள். முதலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் ஆர்.ஜே.டி தன் ஆட்சியை இழந்தது. இப்போது நிதிஷ் குமாருக்கு நேரம் வந்துவிட்டது. அவர் முதல்வர் பதவியை இழப்பார். மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமையும் என பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜய் குமார் குறிப்பிட்டுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.