கொரோனா ஊரடங்கு காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை ஓராண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் வழங்கப்பட தளர்வை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் மலை ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் ஊட்டி டூ குன்னூர் இடையே 3 முறையும், மேட்டுப்பாளையம் டூ ஊட்டி இடையே ஒரு முறையும் இயக்கப்படுகிறது.
ஊட்டியிலிருந்து குன்னூருக்கு செல்ல முதல் வகுப்பு ரூ.350, 2-ஆம் வகுப்பு ரூ.150, மேட்டுப்பாளையத்துக்கு செல்ல முதல் வகுப்பு ரூ.600, 2-ஆம் வகுப்பு ரூ.295 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் டூ குன்னூர் பாதையில் பாறை விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்ததால், மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதன் பின்னர் சீரமைப்பு பணி முடிந்து கடந்த அக்டோபர் மாதம் மேட்டுப்பாளையம் டூ ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்பட்டது. இதனையொட்டி ஊட்டி ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் டூ குன்னூர் ரயில் பாதையில், அடர்லிக்கும் ஹில்குரோவுக்கும் இடைப்பட்ட பகுதியில் 16வது கிலோ மீட்டரில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் இரண்டு நாட்கள் ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்டது. 2 நாட்களாக ரத்தாகிய மலைரெயில் சேவை கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி மீண்டும் தொடங்கிய நிலையில், கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி கல்லார் – அடர்லி இடையே மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்துள்ளது.
இதனால் மேட்டுப்பாளையம் டூ ஊட்டி ரயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பாறைகள் மலை பகுதியில் இருந்து உருண்டு விழுந்து போக்குவரத்தில் தடை ஏற்படுத்தியது. ஊழியர்கள் அவற்றை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். தண்டவாள சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. இருப்பினும், தொடர் மழையால் ஊட்டி மலை ரயில் சேவை 15 நாட்களுக்கு ரத்து செய்யப்படுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







