“ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்” – வைகோ

பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சர் விஜய்க்கு துளியளவும் கிடையாது என்று வைகோ தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“காவிரி மேலாண்மை வாரியம் தனது கடமையைத் தவறியிருக்கிறது. கர்நாடகாவுக்கு நரேந்திர மோடி அரசு பின்னால் இருந்து பக்கபலமாக ஊக்குவித்து வருகிறது. இது தமிழக மக்களுக்குச் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம்” என்றார்.

அடுத்த பிரதமர் வேட்பாளர் விஜய் எனக் கூறுவதற்கு காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அது குறித்த கேள்விக்கு, “பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சர் விஜய்க்குத் துளியளவும் கிடையாது. அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் யோசித்துப் பேச வேண்டும். இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிதான் தலைமையாக இருக்கிறது. அந்த அணியின் வேட்பாளரைத்தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியும். ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும். வேறு வழியே கிடையாது” என்றார்.

முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பாதுகாப்பு குறைக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு, “என்ன காரணம் என்று தெரியவில்லை. அந்தப் பாதுகாப்பை மீண்டும் கொடுப்பதுதான் சரியாக இருக்கும்” என்றார்.

100 நாள் விஜயின் ஆட்சி குறித்த கேள்விக்கு, “ஊழலற்ற ஆட்சி, கடன் வாங்கித்தான் கப்பம் கட்ட வேண்டும் என்ற நிலையை மாற்றிவிட்டார்கள். ஊழலை ஒழிப்பது என்பது இமயமலையை நகர்த்துவது போல. அதில் பழம் தின்று கொட்டை போட்ட அதிகாரிகள் இருக்கிறார்கள். மாதாமாதம் பெருமளவு பணம் கமிஷனாகப் பெற்ற அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.