ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரத்தில், ஆளுநருக்கு என்ன அழுத்தமோ தெரியவில்லை எனவும், ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என கூறியதை அவர் தவிர்த்திருக்கலாம் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன், 34 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, முதலில் சமூக நீதிக்கொள்கையை தூக்கி சுமந்த பெரியாரின் வாரிசான ஈ வி கே எஸ் இளங்கோவன் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ஆளுநர் திருப்பியனுப்பிய விவகாரம் தொடர்பாக பேசிய அப்பாவு, தமிழக அரசால் அனுப்பபட்ட அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதனை ஆய்வு செய்தாரா? என்ன செய்தார்? எனவும் தெரியவில்லை?, காலம் தாழ்த்தியது ஏன்? எனவும் தெரியவில்லை.
ஆளுநர் அவர்களின் வரம்புக்குள் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதிகாரம் இல்லை என எந்தச் சட்டத்தின் மூலம் சொன்னார்? என தெரியவில்லை. அப்படி கூறாமல் அதனை அவர் தவிர்த்திருக்கலாம். இந்திய அரசியலமைப்புச்சட்டம் 200 ஐ படித்து பார்த்து சரியான வார்த்தைகளை எழுதியிருக்கலாம்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இந்த அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கொண்டு வரவில்லை. சட்டமுன்வடிவில் எந்தத் தவறும் இருப்பதாகவும் தெரியவில்லை. ஆரம்பத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் ஆதரவாகத்தான் இருந்தார். 2022- ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி ஒரு நிலைப்பாடும், 2023 மார்ச் 8 ஆம் தேதி ஒரு நிலைப்பாடும் ஆளுநர் எடுத்துள்ளார். ஆளுநருக்கு எங்கிருந்து எந்த அழுத்தம் வந்ததோ தெரியவில்லை என சபாநாயகர் கூறினார். மேலும் வடிவேல் சொல்ற மாதிரி மீண்டும் சட்ட மசோதவை சட்டமன்றத்தில் இயற்றி ஆளுநருக்கு நம்பி அனுப்பி வைப்போம்” என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா








