வங்கிகளில் காலியாக உள்ள 1828 பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஐ.பி.பி.எஸ் எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் காலியாக உள்ள 1828 ஐடி அலுவலர், வேளாண் கள அலுவலர், சட்ட அலுவலர், மனிதவள மேம்பாட்டு அலுவலர், விளம்பர அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் நவம்பர் 23-ம் தேதிக்குள் http://www.ibps.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்தவர்களுக்கான முதல்நிலை ஆன்லைன் தேர்வு வரும் டிசம்பர் 26-ல் நடைபெறும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கான முதன்மைத் தேர்வு 2022 ஜனவரி 30-ல் நடைபெறும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு ஏப்ரலில் பணி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








