மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அவர், கடந்த அதிமுக ஆட்சியால், மின் வாரியத்திற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ளதாகவும், வட்டியாக மட்டும் அதிமுக அரசு ஒரு வருடத்திற்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டார்.
தனியாரிடம் பெறும் கடனுக்கான வட்டி 7 சதவீதமாக இருக்கும் நிலையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் 9 முதல் 13 சதவீத வட்டிக்கு கடன் பெற்றதாக குறிப்பிட்ட செந்தில் பாலாஜி, நடப்பாண்டில் 2 ஆயிரம் கோடி ரூபாய், வட்டி சேமிப்பு செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். மேலும், 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை மின் இணைப்பிற்காக விண்ணப்பித்த, 2 லட்சத்து 42 ஆயிரம் விவசாயிகளுக்கு இது வரை மின் இணைப்பு வழங்காதது ஏன்? என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
கடந்த 2016- 2021 அதிமுக ஆட்சி காலத்தில் பில்லர் பழுது மூலம் 5 லட்சம் முறை மின் தடை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், டிரான்ஸ்பார்மர் மூலம் 10,552 முறை மின் தடை ஏற்பட்டுள்ளது என்றார். கடந்த 9 மாதங்களாக மின் பராமரிப்பு செய்யாமல் இருந்ததால், மின்தடை ஏற்படாமல் இருப்பதற்காக மின் பராமரிப்பு வேலைகள் கடந்த 10 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறினார். மேலும் மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என அவர் தெரிவித்தார்.