சென்னை திண்டிவனத்தில் அடுத்தடுத்து வரிசையாக ஆம்னி பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது.
பண்டிகையையொட்டி வந்த விடுமுறை தினத்தையடுத்து பொதுமக்கள் பலர் சுற்றுலா சென்றிருந்தனர். அப்படி சுற்றுலா சென்று கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை தாம்பரத்தைச் சேர்ந்த தேவா டிரைவர் ஓட்டி வந்தார். இந்த பேருந்து சென்னையை அடுத்த திண்டிவனம், சென்னை புறவழிச் சாலையில் அதிகாலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்த போது டீசல் இல்லாமல் ஏர் லாக் ஆகி நின்றது.
இந்த பேருந்தின் பின்னால் பொள்ளாச்சியில் இருந்து சென்னை சென்று கொண்டு இருந்த ஆம்னி பேருந்து மோதியது. இந்த பேருந்தை நெல்லையை சேர்ந்த நடராஜன்(42) ஓட்டி வந்தார். இதைத் தொடர்ந்து நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து அடுத்தடுத்து மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் பொள்ளாச்சியை சேர்ந்த லலிதாம்பிகை (30), சென்னையை சேர்ந்த ரேவதி (23) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் புறப்பட்டு சென்றனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







