பனை மரங்களை வெட்டக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதற்கு ஓமலூர் பகுதியில் உள்ள பனை தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளான தாரமங்கலம், பெரிய காடம்பட்டி சிக்கம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் லட்சக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. இந்த மரங்களிலிருந்து பதனீர், பனங்கள்ளு, கருப்பட்டி உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பனை மரங்களை நம்பி, சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனைத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஓமலூர் காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் செங்கல் சூளைகள் உள்ளதால் செங்கற்கள் தயாரிக்க பனை மரங்கள் அதிகளவில் வெட்டப் பட்டு வந்தன. பனை மரங்களை வெட்டக் கூடாது என தொழிலாளர்கள், அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு பனை மரங்களை வெட்டக் கூடாது என இப்போது உத்தர விட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இங்கு உள்ள தொழிலாளர்கள் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறியதால் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.







