ஓமலூரை அடுத்துள்ள தின்னப்பட்டி ரயில்வே நிலையம் அருகில் கிளினிக் வைத்து ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி தாலுகாவில் தின்னப்பட்டி ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில்வே நிலையம் அருகில் போலி மருத்துவர் ஒருவர் கிளினிக் வைத்து நடத்தி வருவதாக சுகாதாரத்துறையினருக்கு புகார் வந்தது.
தகவலின்பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தீவட்டிப்பட்டி போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்பொழுது சித்த மருத்துவம் படித்துவிட்டு ஓமலூர் ஆர்.சி.செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆண்டரஸ் கிளினிக் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், அங்கிருந்து மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
—கோ. சிவசங்கரன்







