காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தலைமையிலான நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரண்டு விதமான பேனர்களை வைத்து இரண்டு போராட்டங்கள் நடைபெற்றதாக
காங்கிரஸ் கட்சியினர் கணக்கு காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பதவி சமீபத்தில் அவதூறு வழக்கின் காரணமாக பறிக்கப்பட்டது. இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே தெற்கு வட்டார காங்கிரசார் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், மாநில பொதுச்செயலாளர் மணிவண்னன் உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.
கூட்டம் நிறைவடைந்ததையொட்டி காங்கிரஸ் கட்சியினர் கலையத் தொடங்கிய போது வேகமாக வந்த சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் ராமகிருஷ்ணன் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பேனர் மீது புதியதாக மற்றொறு பேனரை வைத்து நகர காங்கிரஸ் சார்பில் போராட்டம் என அறிவித்து சிறிது கோஷம் எழுப்பி அதனை புகைப்படம் எடுத்துவிட்டு சென்றார்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தொடரில் பங்கேற்க இருப்பதால் இப்படி ஒரே போராட்டத்தை இரண்டு போராட்டங்கள் என கணக்கு காட்டியதாக கூறுகின்றனர்.
—- வேந்தன்







