ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாடு விராங்கனை பவானி தேவி தோல்வியடைந்து ஏமாற்றமளித்தார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோக்வில் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 127 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் அதானு தாஸ், பிரவின் ஜாதவ், தருண் தீப் ராய் அடங்கிய இந்திய அணி, கஜகஸ்தானை 6க்கு 2 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம், காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, தென் கொரிய அணியை எதிர்கொள்கிறது.
டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத் கமல், போர்ச்சுகலைச் சேர்ந்த அபோலோனியாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 4க்கு 2 செட் கணக்கில் வெற்றி பெற்ற அவர் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் 3வது சுற்று போட்டியில் சீன வீரர் மா லாங்கை சரத் கமல் எதிர்கொள்கிறார்.
வாள்வீச்சு போட்டியின் இரண்டாவது சுற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி தோல்வியடைந்தார். முதல்சுற்றில் 15க்கு 3 என்ற புள்ளி கணக்கில் துனிசிய வீராங்கனையை வீழ்த்தி முன்னேறிய பவானி தேவி, 2வது சுற்றில் உலகின் 3ம் நிலை வீராங்கனையான பிரான்ஸ் வீராங்கனை ப்ரூனெட்டை எதிர்கொண்டார். இதில், 7க்கு 15 என்ற புள்ளி கணக்கில் பவானி தேவி தோல்வியை தழுவினார்.









