இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியா சத்தில் வெற்றி பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டி, கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் அரை சதம் விளாசினார். ஷிகர் தவான் 46 ரன்கள் எடுத்தார்.
இலங்கை தரப்பில் துஷமந்த சமீரா, வசந்து ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து இலங்கை அணி, தனது பேட்டிங்கை தொடங்கியது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் இலங்கை வீரர்கள் திணறினர். அந்த அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியின் சரித் அசலன்கா அதிகப்பட்சமாக 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.
இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும் தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் குணால் பாண்ட்யா, வருண் சக்கரவர்த்தி, சாஹல், ஹர்த்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த போட்டி நடந்துகொண்டிருந்தபோது சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்த பிறகு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதை கவனித்துக் கொண்டிருந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ’என்ன இப்படி விக்கெட்டை பறிகொடுத் துட்டாரே’ என்றபடி ரியாக்ஷன் கொடுத்தார். அந்த ரியாக்ஷனை சமூக வலைதளங் களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.








