“சம ஊதியம் வழங்க மனமில்லாமல்.. இருக்கும் ஊதியத்தையும் பறிக்கும் திமுக அரசு..” – நயினார் நாகேந்திரன்

சம ஊதியம் வழங்க மனமில்லாமல் தெருவிலிறங்கிப் போராடவிட்டு, இருக்கும் ஊதியத்தையும் திமுக அரசு பறிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சம ஊதியம் வழங்க மனமில்லாமல் தெருவிலிறங்கிப் போராடவிட்டு, இருக்கும் ஊதியத்தையும் திமுக அரசு பறிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது,

“சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும்” என்று தேர்தல் வாக்குறுதி எண் 311-ல் முழங்கிவிட்டு, நான்கரை ஆண்டுகளாக வழங்காமல் ஏமாற்றி, இடைநிலை ஆசிரியர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளி, குண்டுக்கட்டாகக் கைது செய்வதோடு, தற்போது போராடும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாது எனத் திமுக அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது.

https://x.com/NainarBJP/status/2009172384973242583

ஏற்கனவே பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கொடுத்த வாக்குறுதி எண் 181-ஐ வீசி எறிந்ததோடு, தற்போது இருக்கும் ஊதியத்தையும் பிடித்தம் செய்து, ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அராஜகமானது. பல கோடி செலவழித்து “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்று விழா நடத்தத் தெரிந்த திமுக அரசுக்கு, சம ஊதியம் வழங்கப் பணமில்லையா? பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம் என்று முழங்கும் முதல்வர், அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் கருதியும், இடைநிலை ஆசிரியர்களின் குடும்பங்களின் நலன் கருதியும், கொடுத்த வாக்குறுதிப்படி சம ஊதியம் வழங்க மனமில்லையா?

போராடும் ஆசிரியர்களை முடக்கும் சர்வாதிகாரப் போக்கைக் கைவிட்டு, உடனடியாக ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, சம ஊதியம் வழங்கி, மாணவர்கள் நலன் காக்க முனைய வேண்டும் எனத் திமுக அரசை வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.