காளையார்கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டி போட்டு கொலை செய்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே உள்ள கொல்லங்குடி கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்பவரின் மனைவி லெட்சுமி. கருப்பையா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் பிள்ளைகள் அனைவரும் வெவ்வேறு ஊர்களில் திருமணமாகி வசித்து வருகின்றனர். மூதாட்டி லெட்சுமி மட்டும் கொல்லங்குடியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை லெட்சுமி தனது வீட்டிலேயே மர்மமான முறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் இறந்து கிடக்கவே அக்கம்பக்கத்தினர் காளையார்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதுடன் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், முதற்கட்ட விசாரணையில் லெட்சுமி வீட்டிற்கு ஒரு மர்ம பெண் வந்ததாக கூறப்படுகிறது. அவர் இறந்த லெட்சுமிக்கு மகளிர் உரிமை தொகை பெற்று தருவதற்காக தான் வந்திருப்பதாக கூறி உள்ளே நுழைந்து இருக்கிறார்.
மேலும் அந்த பெண் வந்திருப்பது குறித்து லெட்சுமி தனது மகளுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்ததும் அதன் பின்னரே லெட்சுமி கொலை செய்யப்பட்டதுடன் அவரது கழுத்தில் இருந்த 30 பவுன் நகையும் காணாமல் போயிருப்பதும் தெரிய வந்தது.
பின்னர், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில் பெண் வந்து செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. எனவே அந்த மர்ம பெண் நகைக்காக மூதாட்டியை கொலை செய்து தப்பித்து சென்றிருக்கலாம் என்கிற கோணத்தில் காவல்துறை அந்த பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அரசின் மகளிர் உரிமை தொகை பெற்று தருவதாக கூறி உள்ளே புகுந்த மர்ம பெண் 30 பவுன் நகைகளை திருடிக்கொண்டு கொலை செய்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூபி.காமராஜ்







