பொதுவாக இளைஞர்கள், முதியவர்கள் இரு தலைமுறையினருக்கும் இடையே எப்போதும் ஒரு இடைவெளி இருப்பது நிதர்சனம். இந்த இடைவெளியிலும் சில புரிந்துணர்வும், சில சமயம் சில முரண்பாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. உரிமையுடன் கூடிய சண்டையாக இருந்தாலும், இதுபோன்ற முரண்பாடுகள் எல்லையைக் கடந்து ஒரு சாரார் மீது மன ரீதியான அல்லது உடல் ரீதியான தாக்குதலாக அது உருமாறும்போது, இறுதியாக அது முதியோர்கள் மீதே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அவ்வாறாக இந்தியாவில் முதியோர் மீதான மனித உரிமை மீறல்கள், சென்ற ஆண்டினை விட இந்த ஆண்டு அதிகரித்திருப்பது மட்டுமல்லாமல், அது அவர்களை ஆபத்தான நிலைக்குக் கொண்டு செல்கிறது எனக் கூறுகிறது சமீபத்திய ஒரு ஆய்வறிக்கை. கோவிட் -19ன் இரண்டாவது அலை தீவிரம் அடைந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கினை அமல்படுத்தின. இந்த ஊரடங்கு காலத்தில் “முதியவர்களின் நிலை என்ன?” என்பது குறித்து ஏஜ்வெல் அறக்கட்டளை என்ற அமைப்பு ஆன்லைன் கணக்கெடுப்பு ஒன்றினை நடத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜூன் 2021 மாதங்களில் நாடு முழுவதும் தன்னார்வலர்களைக் கொண்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 5000க்கும் மேற்பட்ட முதியவர்களிடம் உரையாடி, அவர்களிடம் பதில்கள் பெறப்பட்டன. கோவிட் -19ன் இரண்டாவது அலை மற்றும் ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகள் , பெரும்பாலான வயது மூத்தோரை ஆபத்தான நிலையில் வாழ கட்டாயப்படுத்தியுள்ளது என அந்த கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. முதியோர் தங்கள் வாழ்க்கையில் மிகவும் கடினமான கட்டத்தைக் கடந்து, மரணம் தொடர்பான அச்சம், குடும்ப உறுப்பினர்களை இழத்தல் அல்லது கோவிட் -19 காரணமாக குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை இழப்பு போன்ற அச்சத்திற்கு, நடுவே வாழ்வதாக இந்த அறிக்கை கூறுகிறது.

ஆய்வறிக்கையின் கேள்விகளுக்குப் பதிலளித்த முதியோர்களில் 82 சதவீதம் பேர் இந்த ஊரடங்கு காலத்தில் தங்கள் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். 73 சதவீத முதியோர் ஊரடங்கின் போது தங்கள் மீதான வன்முறைகள், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அவர்களில் 61% பேர் தங்களது குடும்பங்களுக்குள்ளேயே இதுபோன்ற வன்கொடுமைகள், அவர்கள் ஏவப்படுவது அதிகரித்து வருகிறதாகத் தெரிவிக்கின்றனர். 58 சதவீத முதியவர்கள், தங்கள் வாழ்க்கையில், அவர்கள் சுற்றுவட்டாரத்தை சார்ந்தவர்களாலேயே புறக்கணிக்கப்படுவதாகக் கூறியுள்ளனர்.
பெரும்பாலான முதியோர் தங்களின் குடும்பத்தைச் சார்ந்து இருக்க வேண்டியதாலே, அதிகம் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என இவ்வறிக்கை கூறுகிறது. அதிலும், ஆண்களை விடவும் வயது முதிர்ந்த பெண்களே மிக அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
முதியோர்களுக்கு, அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, மோசமான உடல் நிலை, மற்றும் தங்கள் தேவைகளுக்கான பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணிகளால் இதுபோன்ற வன்கொடுமைகளுக்கு ஆளாக்குகின்றனர். அவமரியாதை மற்றும் வாய்மொழி துன்புறுத்தல், அவர்களின் அன்றாட தேவைகளைப் புறக்கணித்தல், சரியான உணவைத் தர மறுப்பது, மருத்துவ உதவியைக் கொடுக்க மறுப்பது, உடல் மற்றும் மன ரீதியான வன்முறையும் போன்றவை முதியோர்கள் சந்திக்கும் அடிப்படையான இன்னல்களாகக் கருதப்படுகிறது. இதனால், வயது முதிர்ந்தவர்கள் மனச்சோர்வு, குடும்பத்தினர் புறக்கணிப்பால் தனிமை, மன அழுத்தம், மது மற்றும் புகைப் பழக்கங்கள், மரணம் குறித்த பயம், பதட்டம், விரக்தி, சுயமரியாதை இல்லாமை போன்ற கடுமையான உளவியல் சவால்களை எதிர்கொள்வதாக இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘தொல்லை, இம்சை’ என்ற வட்டத்துக்குள் அடைக்கப்பட்டு, வயதானோர் பலர் முதியோர் இல்லத்தில் விருப்பமின்றி தள்ளப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. முதியோர்களும் குழந்தைகள் போலத் தான். ஏனெனில், வயது ஆக ஆக முதியோர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல், இன்னொருவர் துணையை நாடும் நிலை ஏற்படுகிறது. ஒரு குழந்தையை நடக்க அழைத்துச் செல்வது, உணவு ஊட்டிவிடுவது, எந்நேரமும் அருகே இருந்து ஒருவர் பார்த்துக் கொள்வது போன்ற தேவைகள் முதியோருக்கும் தேவைப்படுவதால் அவர்களும் குழந்தைகள் தான்.
தங்கள் வாழும் கடைசிக் காலங்களில் தங்கள் சுற்றத்தாரிடம் இருந்து, அவர்கள் மன ரீதியாக எதிர்பார்ப்பது அன்பு மட்டுமே. தந்தையர் தினம், அன்னையர் தினம் எனக் குறிப்பிட்ட நாட்களில் சமூக வலைத்தளங்களில் மட்டும் அவர்களைக் கொண்டாடிவிட்டு, மற்ற நேரங்களில் அவர்களைப் புறக்கணிக்காமல், அன்பையும். அரவணைப்பையும் அளிப்போமானால், அந்த நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகமாகும்.