’பழங்குடி மக்களுக்குச் சாதி சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் கால தாமதம் செய்யக் கூடாது’

பழங்குடி மக்களுக்குச் சாதி சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் கால தாமதம் செய்யக் கூடாது, தீண்டாமை கடைப்பிடிக்கும் நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய தலைவர் பி.ஆர்.சிவக்குமார்…

பழங்குடி மக்களுக்குச் சாதி சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் கால தாமதம் செய்யக் கூடாது, தீண்டாமை கடைப்பிடிக்கும் நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய தலைவர் பி.ஆர்.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய அறிமுகம் மற்றும் ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆணைய தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஆர்.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியர், காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர், கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்ட வழக்கறிஞர்கள், தொண்டு நிறுவன உறுப்பினர்கள் பங்கேற்றனர், கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆணைய தலைவர் பி.ஆர்.சிவக்குமார் “பழங்குடி மக்களுக்குச் சாதி சான்றிதழ் வழங்குவதில் வருவாய் அதிகாரிகள் கால தாமதம் செய்யக் கூடாது.

அதிகாரிகள் கால தாமதம் செய்யாமல் இருக்க வேண்டிய உத்தரவுகளை அதிகாரிகளுக்குப் பிறப்பிக்க அரசுக்குப் பரிந்துரை செய்யவுள்ளோம், பழங்குடி மக்களில் சாதி சான்றிதழ் கோரும் நபர்களின் தந்தை, தாயார், சகோதரர் ஆகியோருக்கு ஏற்கனவே சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தால் அதைக்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் சான்றிதழ் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘இல்லாத சாலை; சாலை போடப்பட்டுவிட்டதாகக் கிடைத்த பதில் – நடந்தது என்ன?’

மேலும், விஷவாயு தாக்கி உயிரிழக்கும் தூய்மை பணியாளர்கள் வழக்குகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதையும், இழப்பீடு உள்ளிட்டவை முறையாகச் சென்று சேர்கிறதா என்பதையும் கண்காணிக்க ஆணையத்திற்கு தற்போது பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இனிமேல் இந்த விவகாரங்களில் ஆணையம் தீவிரமாகக் கண்காணிக்கும், தீண்டாமை கடைப்பிடிக்கும் கிராமங்களைக் கண்காணித்து, அதைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தீண்டாமை கடைப்பிடிக்கும் நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறையின் கீழ் ஒதுக்கப்படும் நிதி முழுமையாக மக்களுக்குச் செலவு செய்யப்படாமல் திருப்பி அனுப்பியது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்ப உள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.