நடிகர் விக்ரம் நெஞ்சுவலி காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அப்பாவின் உடல்நிலை குறித்து வீண் வதந்திகள் பரப்ப வேண்டாம் எனவும் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக உடலை வருத்தி எடையை குறைத்தும், ஏற்றியும் அதற்கு புதிய வடிவத்தில் உயிர் கொடுப்பவர். சில மாதங்களுக்கு முன்பு வெளியான மகான் திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவர் நடித்த பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உடல்நலக்குறைவு
இந்த நிலையில் நடிகர் விக்ரம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டதாக அவரது மக்கள் தொடர்பு அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். விக்ரம் விரைந்து உடல்நலம் பெற்று வர வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டிஸ்சார்ஜ்
நெஞ்சு வலி காரணமாக நேற்று காவேரி மருத்துவமனையில் நடிகர் விக்ரம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது உடல்நிலை சீராக உள்ளதால் இன்று மாலை அல்லது நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து அவர் ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
வதந்திகளை பரப்ப வேண்டாம்
இதுகுறித்து நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கூறுகையில், அப்பாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக பரவும் வதந்தி மனவேதனையை தருகிறது. சியான் இப்போது நலமாக இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலாளர் சூரிய நாராயணன் கூறுகையில், நடிகர் விக்ரமுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வதந்திகள் பரவி வருவது வேதனை அளிப்பதாகவும், இன்னும் ஒரு நாளில் அவர் நலமுடன் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.