தீவிர சிகிச்சையில் இருக்கிறார் நல்லகண்ணு : பொய்யான தகவல்களை வெளியிட வேண்டாம் – வீரபாண்டியன்……!

மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு உடல் குறைவு காரணமாக , கடந்த இரண்டு நாட்களாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரது உடல்நிலையில் நேற்று முன் தினம் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் செயற்கை சுவாசம் மூலம் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பாக மதியத்திற்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சூழலில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், மாநில துணை செயலாளர் பெரியசாமி, முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர் நாராயணன், மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் உள்ளிட்டோர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

பின்னர் செய்தியார்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியதாவது :

நல்ல கண்ணு தீவிர சிகிச்சையில் உள்ளார். வதந்திகளாக வரும் செய்திகள் தவறானது. அவருடைய உடல் நலம் குறித்து, அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிடப்படும். பொய்யான தகவலை யாரும் வெளியிட வேண்டாம்

மருத்துவமனை சார்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காத்திருக்கும் . அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை தான் அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள். தன் வாழ்வின் பெரும் பகுதியை மக்களுக்காக போராடியவர் இயற்றையோடு போராடி வருகிறார் . மருத்துவமனை அறிக்கை பிறகாக நாங்கள் முறைப்படி தமிழ்நாடு மக்களுக்கு அறிவிப்போம்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.