மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் நோக்கில் பஞ்சாபில் அரசு அலுவலகங்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படத் தொடங்கியுள்ளன.
கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மின்விசிறிகள், ஏசி உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவர். இதன் காரணமாக மின்சாரத்தின் தேவையும் அதிகரிக்கும். அதே வேளையில், சில இடங்களில் மின்தடை ஏற்படுவதும் வழக்கம்.
இதனிடையே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பகவந்த் சிங் மான் முன்னதாக அறிவித்திருந்தார். அவர் அறிவித்தபடி, இன்று இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வந்தது.
இதையும் படியுங்கள் : விவசாயிகளை வஞ்சிக்கும் என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் – அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன்
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வந்த அலுவலகங்கள் இன்று முதல் ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரை, காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட உள்ளது. தேவைப்பட்டால் ஜூலை 15 ஆம் தேதிக்குப் பிறகும் இந்த நேர மாற்றம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், காலை 7.30 மணிக்கு தனது அலுவலகம் வருகை தந்தார். இந்த நேர மாற்றத்தின் மூலம் சுமார் 350 மெகாவாட் வரை மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று கூறப்படுகிறது.







