விவசாயிகளை வஞ்சித்து என்எல்சி நிறுவனத்தை கொண்டு வரத் தேவையில்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில், புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழித்தேவன், “விவசாயிகளை இந்த கூட்டத்திற்கு அழைத்திருக்க வேண்டும். அவ்வாறு விவசாயிகளை அழைத்திருந்தால் ஒரு முழுமையான கூட்டமாக இருந்திருக்கும். விவசாய மக்கள் மிகவும் பாடுபட்டு வருகின்றனர். எல்லோருக்கும் ஒரே விதமாக இழப்பீடு வழங்க வேண்டும்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டிற்கு என்எல்சி இனி தேவையில்லை! – அன்புமணி ராமதாஸ் பேட்டி
தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு என்எல்சி மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. 1989 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒருவருக்கு கூட நிரந்தர வீடு வழங்கவில்லை. இடம் கொடுத்தவர்களுக்கு அப்பகுதியில் வாய்ப்பு கொடுக்கவில்லை. பொறியியல் படித்த இளைஞர் மாடு வளர்ப்பதை பற்றி, என்எல்சி நிறுவனம் எனக்கு சொல்லித் தருகிறார்கள். MBA படித்த பெண்களுக்கு, படிப்புக்கு ஏற்ற வேலையை என்எல்சி நிறுவனம் கொடுக்கவில்லை.
மனிதர்கள் வாழக்கூடிய நிலைமை மாறி வருகிறது என ஐநா சபை சொல்லியது. அதனை மத்திய அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. என்எல்சி நிறுவனத்தின் ஒரே கொள்கை, மக்கள் வாழ்ந்தாலும், வாழவில்லை என்றாலும் தங்களுக்கு நிலம் வேண்டும் என்பதுதான். விவசாயிகளை வஞ்சித்து இந்த என்எல்சி நிறுவனத்தை கொண்டு வரத் தேவையில்லை. அடுத்த ஆலோசனைக் கூட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். மூன்றாம் சுரங்கம் தோண்டும் பணியை கைவிடுமாறு நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.







