காமன்வெல்த் 2026 போட்டிகள் ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 69 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 29 வயதான அவர், மொத்தம் 227 கிலோ எடையைத் தூக்கி இப்பதக்கத்தை வென்றார்.
அதே போல ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மூலம், அப்பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார். ஸ்காட்ஸ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அவர் 27:49.78 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்தார்.
இந்த நிலையில் காமன்வெல்த் போட்டிகளில் பதங்கங்களை வென்ற ஹர்ஜிந்தர் கவுர் மற்றும் குல்வீர் சிங் ஆகியோருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 69 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹர்ஜிந்தர் கவுருக்கு வாழ்த்துகள். மேலும் அவரது ஆட்டம் தனிப்பட்ட சிறப்பானது என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டுப் போட்டிகளில் நமது பளுதூக்குபவர்கள் சிறப்பாகச் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஹர்ஜிந்தரின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில் “கிளாஸ்கோவில் குல்வீர் சிறப்பானதொரு வெற்றியைப் பதிவு செய்துள்ளார்! ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் பாராட்டுக்குரியவை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.




