தமிழ்நாடு முழுவதும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு மக்கள் சொல்லும் பாதிப்பையும், தீர்வுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை நின்ற பின்னரும் கூட வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (21.11.2021) சென்னையில் “தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்ன, தண்ணீர் தேங்காமல் இருக்க தீர்வு என்ன?” என நியூஸ் 7 தமிழ் தொடர் நேரலையை, வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது.
https://twitter.com/news7tamil/status/1464835851775406082
அதன் தொடர்ச்சியாக இன்று, தமிழ்நாடு முழுவதும் காலை 10 மணி முதல் வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து கள ஆய்வு மேற்கொண்டு மக்கள் சொல்லும் பாதிப்பையும், தீர்வுகளையும் தொடர் நேரலையாக ஒளிபரப்பு செய்து வருகிறது நியூஸ் 7 தமிழ்.
இதன் ஒரு பகுதியாக, நெல்லை, சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மக்கள் கூறுவதாவது: “சுமார் முப்பது ஆண்டுகாலமாக இந்த பகுதி இதே நிலையில் இருக்கிறது. கோழி போன்றவைகள் மழை நீரில் அடித்து செல்லப்படுகிறது. அதை கூட அந்த நேரத்தில், எங்களால் காப்பாற்ற முடியாமல் போகிறது.
எங்களுக்கு இதுதான் பாதை, மழை காலங்களில் இங்கு இடுப்பு அளவு தண்ணீர் இருப்பதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை எங்களுக்கு உண்டாகுகிறது. ஆட்டோக்கள் கூட வருவதில்லை. இதனால், பெரிதும் பாதிப்படைகின்றோம்.
ஒவ்வெரு ஆண்டும் இதே நிலைதான் எங்களுக்கு. வடிகால் கட்டி நீர் வழிப் பதையை உருவாக்கி நீர் வெளியேற செய்ய வேண்டும். சுமார் 25 ஆண்டுகாலமாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். இந்த பகுதிகளில் 5000 வீடுகளுக்கு மேல் உள்ளது. ஆக்கரமிப்பு பகுதிகளை மீட்டு வடிகால் அமைப்பதே தீர்வாக இருக்கும்” என சாய்பாபா காலனி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.








