தமிழ்நாடு முழுவதும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு மக்கள் சொல்லும் பாதிப்பையும், தீர்வுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை நின்ற பின்னரும் கூட வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (21.11.2021) சென்னையில் “தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்ன, தண்ணீர் தேங்காமல் இருக்க தீர்வு என்ன?” என நியூஸ் 7 தமிழ் தொடர் நேரலையை, வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது.
அதன் தொடர்ச்சியாக இன்று, தமிழ்நாடு முழுவதும் காலை 10 மணி முதல் வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து கள ஆய்வு மேற்கொண்டு மக்கள் சொல்லும் பாதிப்பையும், தீர்வுகளையும் தொடர் நேரலையாக ஒளிபரப்பு செய்து வருகிறது நியூஸ் 7 தமிழ்.
இதன் ஒரு பகுதியாக, கடலூர், சின்ன கங்கனாங்குப்பம் பகுதியில் உள்ள மக்கள் கூறுவதாவது: “வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் முன் அறிவிப்பு இல்லாமல், ஆற்றில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது எங்களுக்கு பெரிய பாதிப்புகளை உருவாக்கியுள்ளது.
இடுப்பு அளவு தண்ணீர் உள்ளதால், எங்களால் எதையும் செய்ய முடியவில்லை. வீடுகளும் இடிந்து விழுகிறது. அரசு என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை. ஆற்றங்கரையை பலப்படுத்த வேண்டும், மண்கொண்டு பலப்படுத்தாமல், கருங்கல் கொண்டு பலப்படுத்தினால் மட்டுமே எங்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும்.
சின்ன கங்கனாங்குப்பம், பெரிய கங்கனாங்குப்பம் பகுதிகள் தொடர்து இதுபோன்ற வெள்ளக் காலங்களில் கடுமையாக பாதிக்கப்படுறது” என சின்ன கங்கனாங்குப்பம் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.








