வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுக்க வோண்டும்; முத்தம்மாள் காலனி பகுதி மக்கள் கோரிக்கை

தமிழ்நாடு முழுவதும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு மக்கள் சொல்லும் பாதிப்பையும், தீர்வுகளையும் பதிவு செய்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை…

தமிழ்நாடு முழுவதும் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு மக்கள் சொல்லும் பாதிப்பையும், தீர்வுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், மழை நின்ற பின்னரும் கூட வடியாமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (21.11.2021) சென்னையில் “தண்ணீர் தேங்கியதற்கு காரணம் என்ன, தண்ணீர் தேங்காமல் இருக்க தீர்வு என்ன?” என நியூஸ் 7 தமிழ் தொடர் நேரலையை, வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது.

அதன் தொடர்ச்சியாக இன்று, தமிழ்நாடு முழுவதும் காலை 10 மணி முதல் வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து கள ஆய்வு மேற்கொண்டு மக்கள் சொல்லும் பாதிப்பையும், தீர்வுகளையும் தொடர் நேரலையாக ஒளிபரப்பு செய்து வருகிறது நியூஸ் 7 தமிழ்.

இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி, முத்தம்மாள் காலனி பகுதியில் உள்ள மக்கள் கூறுவதாவது: “பத்து வருட காலமாக இந்த பகுதி இப்படியேதான் இருக்கிறது. எந்த வித மாற்றமும் இல்லை. அரசு அதிகாரிகள் வருகிறார்கள் ஆனால், எதையும் எங்களுக்கு செய்து கொடுப்பது இல்லை. சரியான வடிகால் வசதியை அரசு செய்து கொடுத்தால் மட்டுமே தீர்வாக இருக்கும். கடைகளுக்கும் செல்ல முடியவில்லை, மருத்துவமனைக்கும் செல்ல முடியவில்லை. அருகில் உள்ள பகுதிக்கு செல்ல சைக்கிள் பயன்படுத்தி மட்டுமே சென்று வருகிறோம்.

மழையின் போது இங்கு தேங்கும் மழைநீர், வெளியே செல்ல முடியாதபடி இங்கு உள்ள பகுதிகள் அடைக்கப்படுள்ளது. இங்கு உள்ள பல பாலங்கள் அடைக்கப்படுள்ளது. இதனால், மழைநீர் இயற்கையாக அதன் பாதையில் செல்ல வழி இல்லாமல் போகிறது. இதன் காரணமாக நீர் தேங்கி ஆறு போல இருக்கிறது. வெள்ள பாதிப்பு வரும் போது ஆட்சியர் முதல் எம்.எல்.ஏ வரை எல்லோரும் வருகிறார்கள். ஆனால், தீர்வு இல்லை.

மோட்டார் வைத்து இங்கு உள்ள நீரை வெளியேற்றுவது அவ்வளவு எளிதானது அல்ல; அப்படி மோட்டார் வைத்து வெளியேற்றுவதற்கு மூன்று மாதம் கூட ஆகலாம், அவ்வளவு தண்ணீர் இங்கு உள்ளது. உடனடியாக வடிகால் அமைத்தால் மட்டுமே எங்களுக்கு தீர்வு கிடைக்கும்” என தூத்துக்குடி, முத்தம்மாள் காலனி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.