ஓபிஎஸ், இபிஎஸ் ஒதுங்கி கொள்ள வேண்டும்- முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி

அதிமுக தலைமை பொறுப்பிலிருந்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே ஒதுங்கி கொள்ள வேண்டும் என அதிமுக கோவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி தெரிவித்துள்ளார். அதிமுகவில் கடந்த சில தினங்களாக ஒற்றை தலைமை குறித்த பிரச்னை…

அதிமுக தலைமை பொறுப்பிலிருந்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே ஒதுங்கி கொள்ள வேண்டும் என அதிமுக கோவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் கடந்த சில தினங்களாக ஒற்றை தலைமை குறித்த பிரச்னை நடந்து வருகிறது. இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் தனி தனியாக ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தேவையில்லை. தற்போது இருக்கும் இரட்டை தலைமை தொடர்வதே சிறந்தது. கட்சி உடையக் கூடாது, எடப்பாடி பழனிசாமியுடன் பேசத் தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிலையில், கோவை முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் கடந்த இரண்டு நாட்களாக ஒற்றை தலைமை குறித்த பிரச்னை நடந்து வருகிறது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி தேர்தலை நடத்ததாது தான். ஆனால் ஆட்சிக்கு வந்த திமுக சில நாட்களிலே தேர்தலை நடத்தி அதிகம் வெற்றி பெற்றுவிட்டனர்.

ஒபிஎஸ் – இபிஎஸ் இரண்டு பேருமே ஒரு விபத்தின் காரணமாக பதவிக்கு வந்துவிட்டார்கள். இப்போது இரண்டு பேரும் சண்டை போட்டு கொள்கின்றனர். இப்படி சண்டைபோட்டு தான், ஒபிஎஸ் – ஈபிஎஸ் மற்றும் வேலுமணி இருக்கும் வார்டுகளிலே, அதிமுக வெற்றி பெற்று வந்த இடங்களை திமுக கைப்பற்றியது. அதிமுக இப்பொழுது சாதி கட்சிக்காக மாறி வருகிறது. இவர்கள் நன்றி மறந்தவர்கள்.

ஜெயலலிதா இருந்தால் இப்படி ஆயிருக்குமா. ஒபிஎஸ் – இபிஎஸ் இருவருமே ஒதுங்கி கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். நீதான் முதல்வர் என்று கைகாட்டி பதவி கொடுத்தவர் சசிகலா. அவரைக் கேவலமாக பேசலாமா. அதிமுக அலுவலகம் முன்பு கோஷ்டியாக உட்கார்ந்து கொண்டு கோஷம் போட்டு வருகிறன்றனர். இப்படி சண்டை போட்டுகொண்டு கட்சியைக் அழிக்க பார்க்கிறார்கள். ஜெயலலிதா வளர்த்த கட்சி இப்படி சாதி கட்சியாக மாறி வருகிறது. அதிமுகவில் இப்போது துரோகம் செய்யும் நிகழ்வு அதிகரித்து வருகிறது.

அன்வர்ராஜா அருமையான பேச்சாளர் அவரையெல்லாம் நீக்குகிறார்கள். எனக்கு சீட்டு கொடுக்கவில்லை என்று நான் வருத்தப்படவில்லை. இருந்தாலும் நான் கட்சி வேலை பார்க்க தயாராக இருந்தேன். ஆனால் வேலுமணி என்னிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை. ஒற்றை தலைமை யார் வேண்டுமானாலும் வரலாம்.ஏன், நான் கூட வரலாம் என ஆறுகுட்டி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.