திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி நேற்று மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலை அருகே போலிஸ் பூத்திற்குள் சென்ற பூர்ண சந்திரன் என்ற இளைஞர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இந்த நிலையில் அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து முடித்துள்ளனர்.
இது குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் 194 என்ற பிரிவின் கீழ் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை நடைபெரும் இடத்தில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் அனிதா தலைமையில் காவல்துறையினர் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் உயிரிழந்த பூர்ண சந்திரனின் குடும்பத்தினரை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சி அமைப்புகளில் தலைவர்கள் அரசு மருத்துவமனைக்கு வருகை தர உள்ளதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.







