முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் விதிமுறையை மீறியதாக அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று பரப்புரை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக செய்த திட்டங்களை விளக்கி பிரச்சாரம் செய்தார். அப்போது கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியான, மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவது குறித்து பேசினார். மார்ச் மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், அதில் மகளிருக்கான உரிமைத் தொகை வழங்குவது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது, தேர்தல் விதிமுறைக்கு எதிரானது என்று கூறி, அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும் , வழக்கறிஞருமான இன்பதுரை, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு எந்த இருக்கை? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இன்பதுரை, “தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, மகளிருக்கான உரிமைத் தொகை வழங்குவது குறித்து முதல்வர் பேசியது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. சட்டத்தை மதித்து நடக்கவேண்டிய முதலமைச்சரே இதுபோன்று செயல்படுவது தவறானது.
மேலும் 21 மாதங்களாக இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாதவர், தற்போது
வெளியிடுவது சட்டத்திற்கு எதிரானது, தவறானது. இது மக்களை ஏமாற்றும் செயல். அவர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளோம். மேலும் இந்திய தேர்தல் ஆணையத்திடமும் மின்னஞ்சல் மூலமாகவும் புகார் அளித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.








