தாமரையின் ஒரு இதழை கூட அசைக்க முடியாது – அண்ணாமலை குறித்த கேள்விக்கு தமிழிசை பதில்…!

பாஜகவில் இருந்து எந்த இளைஞரும் அண்ணாமலையின் கட்சிக்கு போகவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.

மதுரையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணாமலையின் புதிய கட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “எங்களது கட்சியில் லட்சியவாதிகள் பலர் இருக்கிறார்கள் அண்ணாமலையை கட்சியில் இலட்சம் பேர் என்று கூறுவதெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை. இங்கு உள்ள எந்த இளைஞரும் அண்ணாமலையின் கட்சிக்கு போகவில்லை. சுயநலவாதிகள் தான் அங்கே போகிறார்கள்.

தாமரையின் ஒரு இதழை கூட அசைக்க முடியாது. பாஜகவில் இருந்து வெளியே சென்றவருக்கு எந்தவித வாழ்த்தும் கிடையாது, ஆதரவும் கிடையாது” என்றார்.

தொடர்ந்து தவெக ஆட்சி குறித்த பேசிய அவர், “முதலமைச்சர் விஜய் நடிகராக இருந்தபோது அவரது திரைப்படங்களை 100 நாட்களோ, 1 வருடமோ ஓட வைத்திருக்கலாம்; ஆனால், இன்று அவர் 30 நாட்கள் அரசாங்கத்தை நடத்த கஷ்டப்படுகிறார். ராகுல் காந்தி முதுகில் குத்துபவர் என்பதை திமுக தற்போது உணர்ந்து இருக்கிறது. இதை நாங்கள் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம்” என்றார்.

மேலும் அவர் “அதிமுகவின் எதிர்காலம் குறித்து நான் சொல்வது சரியாக இருக்காது. என்னைப் பொறுத்தவரை தற்போதைய ஆட்சி விசிலிலிருந்து அசலுக்கு வர வேண்டும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.