தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ல் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. தேர்தலுக்கு பின் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருந்த தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் இருந்தது. அப்போது விசிக உள்ளிட்ட கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு அளித்து ஆட்சியமைக்க வைத்தன. மேலும் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் தவெக அமைச்சரவையின் பங்கெடுத்தன. வன்னியரசு சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
விசிக தலைவர் திருமாவளவன் தேர்தலுக்கு முன் தவெக மற்றும் அதன் தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால் தேர்தலுக்கு அவர் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் ஊடகப்பிரிவு முதன்மைச் செயலரும், செய்யூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான பனையூர் பாபு விசிகவிலிருந்து விலகினார்.
இந்த நிலையில் இன்று விசிக முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.
மேலும் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்! – பேரறிஞர் அண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன். விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் பனையூர் பாபு அவர்கள்!
இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம். நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!” என்று பதிவிட்டுள்ளார்.




