நாமக்கல் வெல்ல ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த நான்கு வடமாநில தொழிலாளர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்.
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான வெல்ல ஆலையில்
நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்
நடத்தினர். இதில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயம் அடைந்த 4 வட மாநில தொழிலாளர்கள் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவில்
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், எஸ்.பி சுந்தரவதனம் ஆகியோருடன் கிசிச்சைப் பெற்று வருவோரை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சி.வி.கணேசன்,
சிகிச்சையில் இருக்கும் இரண்டு தொழிலாளர்கள் மயக்க நிலையில் இருப்பதாகவும்,
மற்ற இருவரிடம் மட்டும் ஆறுதல் தெரிவித்ததாக கூறினார்.
அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெல்ல ஆலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணமான
நபர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பாதிக்கப்பட்ட நபர்களை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.







