புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே குளத்துக்கு குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி சதோதரிகள் இருவர் மற்றும் அவரது சித்தப்பா என மூவர் உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியைச் சேர்ந்த விஜயகாந்த் – விஜயலட்சுமி தம்பதி. இவரது மகள்கள் அக்சயா (15), தனலெட்சுமி (12), விஜயகாந்த் தம்பி ஆனந்த குமார் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்துவிடுதி கிராமத்தில் கிடாவெட்டு பூஜைக்காக வந்துள்ளனர். அதே கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில் குளத்தில் குளிப்பதற்காக அக்சயா, தனலெட்சுமி, அவர்களது சித்தப்பா ஆனந்தகுமார் ஆகிய மூவரும் சென்றுள்ளனர்.
அப்போது தனலெட்சுமி குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற அக்சயா, ஆனந்தகுமார் இருவரும் முயன்ற போது எதிர்பாராத விதமாக மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் மூவர் சடலங்களையும் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி காவல் துறையினரும், வருவாய் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
—-அனகா காளமேகன்






