இ.பி.எஸ் முதலமைச்சராவதை யாராலும் தடுக்க முடியாது -எஸ்.பி.வேலுமணி

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதை யாராலும் தடுக்க முடியாது என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திமுக அரசை கண்டித்து வருகின்ற 2 ம் தேதி நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டம் தொடர்பான…

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதை யாராலும் தடுக்க முடியாது என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திமுக அரசை கண்டித்து வருகின்ற 2 ம் தேதி நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, திமுக ஆட்சியில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் எனவும் திமுக அரசை கண்டித்து டிசம்பர் 2 ம் தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு முழுவதும் திமுக அரசு எந்த வளர்ச்சி பணியும் செய்யவில்லை. விளம்பரத்தில் மட்டுமே ஆட்சி ஓடுகிறது.  இதனை கண்டு கொள்ளாத அரசாக உள்ளது எனவும் திமுக டிசைன் டிசைனாக மக்களை ஏமாற்றுகிறது என விமர்சித்தார்.

எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் திமுகவை எதிர்க்கவில்லை. திமுகவை எதிர்த்து ஒவ்வொரு ஊரிலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் சக்தி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது.  மக்கள் ஆதரவு இல்லாமல் யாரும் வளர முடியாது. எதிர் கட்சியாக அதிமுக செயல்படவில்லை என மாயை உருவாக்குகிறார்கள். எனவும் தெரிவித்தார்.

அதிமுக எடப்பாடி பழனிச்சாமி பின்னால் உள்ளது என குறிப்பிட்ட எஸ்.பி.வேலுமணி அடுத்த முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வருவதை யாராலும் தடுக்க முடியாது. தைரியம் இருந்தால் ஆட்சியை கலைத்து தேர்தல் வையுங்கள். இப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சராக வருவார் என தெரிவித்தார்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திமுக அட்டுழியத்திற்கு எதிராக அதிமுகவினர் வேலை செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வோம். சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வென்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார்.  நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து, வருகின்ற 2 ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். அனைத்து சாலைகளும் பழுதடைந்து மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதிமுக திட்டங்கள் செயல்படாமல் உள்ளது. அத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டதோடு, ஒன்றரை ஆண்டுகளில் கோவைக்கு முதலமைச்சர் எந்த திட்டத்தையும் செய்யவில்லை என கூறினார்.

கோவை மாவட்ட மக்களை புறக்கணிக்காதீர்கள் எனக்கூறியவர், கொசு மருந்து அடிக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லை. வரி உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள். மக்களுக்காக தான் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்தார். உளவுத்துறை செயல்படவில்லை. காவல்துறை செயலிழந்து விட்டது எனவும் முதலமைச்சர் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.