கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ், 2015ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி போலீசார் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதியிடம் விசாரணை நடத்த அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து காவல்துறை பாதுகாப்புடன் சுவாதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, கோகுல் ராஜ் கொலை நடந்த அன்று, பதிவான சிசிடிவி காட்சிகள் திரையிடப்பட்டது. இது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், சிசிடிவி காட்சியில் கோகுல் ராஜூடன் உள்ளது தாம் இல்லை என்று சுவாதி பதிலளித்தார். இவ்வளவு பெரிய திரையில் தங்கள் படம் தெளிவாக தெரிகிறது என்றும், ஆனால் நீங்கள் இல்லை என்று சொல்கிறீர்களே என்றும் சுவாதியிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உங்களையே உங்களுக்கு தெரியவில்லையா? என்றும் கேள்வி எழுப்பினர்.
அதன் பிறகும், கோகுல்ராஜை தனக்கு தெரியாது என கண்கலங்கிய படி சுவாதி கூறிய நிலையில், அவரது வாக்குமூலத்தை நீதிபதிகள் பதிவு செய்தனர். இதையடுத்து, சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், அதற்கு பதில் அளிக்க சுவாதிக்கு உத்தரவிட்டனர்.
என்ன அவமதிப்பு செய்தேன் என்று சுவாதி கேட்ட நிலையில், உண்மையை மறைப்பதும் அவமதிப்பு தான் என்று நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். வாழ்க்கையில் முக்கிய நியாயம், தர்மம், சத்தியம். உங்கள் புகைப்படத்தைப் பார்த்து தெரியவில்லை என சொல்கிறீர்கள். இதை எப்படி ஏற்பது. இங்கிருப்பவர்கள் முட்டாள்களா? எனக் காட்டமாக கேள்வி எழுப்பினர். தொடர்ந்து சுவாதி, தனக்கு தெரிந்தவற்றை சொல்லிவிட்டேன் என தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், ” சத்தியம் என்றைக்கானாலும் சுடும்” என தெரிவித்து, வழக்கு விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் சுவாதியை ஆஜர்படுத்த உத்தரவிட்டனர். அன்றும் இதே நிலை தொடர்ந்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்தனர்.







