ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் குட்டி அணிகள்… 2002ல் தென்கொரியா சாதித்தது என்ன?

நடப்பு உலகக்கோப்பையில் குட்டி அணிகள் ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி அளித்து வரும் நிலையில்,  2002ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறி வரலாறு படைத்த தென் கொரிய அணியைப் பற்றி பார்ப்போம்… 2002ஆம் ஆண்டு…

நடப்பு உலகக்கோப்பையில் குட்டி அணிகள் ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி அளித்து வரும் நிலையில்,  2002ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறி வரலாறு படைத்த தென் கொரிய அணியைப் பற்றி பார்ப்போம்…

2002ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியை ஆசிய கண்டத்திலேயே முதல் முறையாக தென்கொரியா, ஜப்பான் நாடுகள் இணைந்து நடத்தின. நடப்பு சாம்பியன் பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, இத்தாலி, அர்ஜெண்டினா என பல ஜாம்பவான்கள் களமிறங்கிய அந்த தொடரில் கத்துக்குட்டி நாடான தென்கொரியா, போட்டியை நடத்திய நாடு என்ற முறையில் தகுதி பெற்றிருந்தது…

போர்ச்சுகல், போலந்து போன்ற அணிகள் இடம்பெற்றிருந்த குரூப்-டி பிரிவில் இருந்த தென்கொரியா அணி, அடுத்த சுற்றையே தாண்டாது என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது.

சொந்த நாட்டு மக்களின் பெரும் ஆதரவோடு களமிறங்கிய தென்கொரியா, பலரின் மெத்தன கணிப்புகளை தவிடுபொடியாக்கியது.. தோல்வியே சந்திக்காமல் அடுத்த சுற்றுக்கு முன்னேறி வியப்பில் ஆழ்த்தியது தென்கொரியா.

வலுவான போர்ச்சுகல் அணியை குரூப் சுற்றில் வெளியேற்றியதும் இந்த சாகச பயணத்தில் அடங்கும்… அடுத்த சுற்றிலோ இத்தாலியுடன் போட்டி..  90 நிமிடங்கள் முடிந்தும் ஆட்டம் 1க்கு 1 என்ற சமநிலையில் இருக்க, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரம் முடியும் தருவாயில் கோல் அடித்து இத்தாலி ரசிகர்களின் இதயத்தை உடைத்தது தென்கொரியா… காலிறுதிச் சுற்றில் வலுவான ஸ்பெயின் அணியுடன் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியை தனதாக்கியது தென் கொரியா… ஐரோப்பிய, தென் அமெரிக்க அணிகள் தவிர்த்து ஒரு அணி அரையிறுதிக்கு முன்னேறுவது அதுவே முதன்முறையாகும்…

ஆசிய அணிகள் நினைத்துக் கூட பார்த்திட முடியாத, மகத்தான சாதனைக்கு தென்கொரியாவை அழைத்துச் சென்றவர் அந்த அணியின் கேப்டன் ஹாங் மியூங்-போ… அரையிறுதியில் தென்கொரியாவுக்கு மேலும் ஒரு பரீட்சை காத்திருந்தது.. ஹாங் மியூங்-போவின் ஆளுமையால் புது ரத்தம் பாய்ந்திருந்த அந்த அணி, ஜெர்மனிக்கு பெரும் சவாலாக விளங்கியது…

சுமார் 70 ஆயிரம் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற அந்த போட்டியில், 1க்கு 0 என்ற கணக்கில் போராடி தோல்வியை தழுவியது தென் கொரியா…யாரும் கனவிலும் கூட நினைத்திராத சாதனையை படைத்த தென்கொரிய அணியின் கேப்டன் ஹாங் மியூங்-போ, அந்த தொடரின் சிறந்த வீரர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.தென்கொரியாவின் வெற்றி, அதிர்ஷ்டத்தால் நேர்ந்தது அல்ல; அது அவ்விளையாட்டின் மீது அந்த அணி வீரர்கள் கொண்ட வேட்கை.. இரவு பகல் பாராத கடின உழைப்பு ஆகியவற்றுக்கான வெகுமதி என்று சொன்னால் அதை மறுப்பதிற்கில்லை…

  • பரணிதரன் 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.